கிருஷ்ணகிரி அணையில் இருந்து 1627 கனஅடி தண்ணீர் திறப்பு 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1627 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-18 04:59 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1,627 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், ஆந்திரா பகுதியிலும் கனமழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேயன் நதியிலும் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வரும் தண்ணீரும் தற்போது கிருஷ்ணகிரி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. 
வெள்ள அபாய எச்சரிக்கை
அதன்படி, நேற்று காலை 8 மணி நிலவரபடி, அணைக்கு வினாடிக்கு 1,739 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கு 177 கனஅடியும், தென்பெண்ணை ஆற்றில் 1,627 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணையின் கீழ் பகுதியில் உள்ள தரைபாலத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தரைபாலத்தை கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தால், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், தென்பெண்ணை ஆறு செல்லும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்