கார்த்திகை மாதம் பிறந்தது: மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்-கோவில்களில் சிறப்பு பூஜை

கார்த்திகை மாத பிறப்பையொட்டி சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2021-11-17 22:38 GMT
சேலம்:
கார்த்திகை மாத பிறப்பையொட்டி சேலத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ேசலம் மாவட்டத்தில் ஏராளமானவர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சேலம் குரங்குச்சாவடியில் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் நேற்று அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் வரத்தொடங்கினர். அவர்கள் மூலவர் அய்யப்பனை வணங்கி கோவில் குருசாமி மூலமாக மாலை அணிந்து கொண்டனர். கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதனை நடந்தது. இதில் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
மாலை அணிந்தனர்
இதேபோல் சேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள அய்யப்பன் கோவிலிலும் நேற்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள் வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சேலம் சுகவனேசுவரர் கோவில், ராஜகணபதி கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவில், ஊத்துமலை முருகன் கோவில் உள்பட மாநகரில் உள்ள பல்வேறு சிவன், விநாயகர், முருகன் மற்றும் அய்யப்பன் கோவில்களிலும் நேற்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
ஒருசில குருசாமிகள் தங்களது வீடுகளில் சிறப்பு பூஜை நடத்தி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சின்னக்கடைவீதியில் உள்ள கடைகளில் துளசி மாலை, சந்தனம், ஜவ்வாது, இருமுடி பூஜை பொருட்களும், காவி வேட்டி, துண்டுகள் விற்பனை அதிகமாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்