புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2021-11-17 21:44 GMT
நாய்கள் தொல்லை 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அண்ணா நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலைகளில் சுற்றித் திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நாய்கள் தெருவில் செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் அவர்கள் வெளியில் செல்லவே அச்சம் அடைகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.             கண்ணன், காரைக்குடி. 
வேகத்தடை தேவை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் வெங்கடாசலபதி பள்ளி அருகே மெயின்ரோடு உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் செல்கின்றனர். இதனால் சாலையை கடக்க மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். விபத்தும் அடிக்கடி நடக்கிறது. எனவே, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். 
அருண், வாடிப்பட்டி. 
ஆறு தூர்வாரப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குண்டாறு உள்ளது. இந்த ஆறு கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. தற்போது ஆறு முழுவதும் செடி,கொடிகள், கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் ஆறு இருக்கும் இடமே தெரியவில்லை. மேலும் நீர்வரத்தும் தடைபட்டுள்ளது. எனவே, உடனடியாக இந்த ஆற்றை தூர்வார மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                               
குருசாமி, கமுதி. 
சாலை வேண்டும்
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் ஆசிரியர் நகர் உள்ளது. இங்குள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குண்டும், குழியுமான இந்த சாலையில் செல்லும் போது வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி இங்கு சாலை அமைக்க வேண்டும். 
கிஷோர்குமார், கல்லல். 
பூட்டி கிடக்கும் நூலகம் 
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை அடுத்த பனையடிபட்டியில் பொது நூலகம் உள்ளது. இந்த நூலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் இங்குள்ள மாணவ, மாணவிகள், புத்தகம், செய்தித்தாள் வாசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
செல்வராஜ், பனையடிபட்டி.
தேங்கி நிற்கும் மழைநீர் 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த மணச்சை கிராமத்தில் மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றுவார்களா?                                  
நாகராஜன், காரைக்குடி. 
குவிந்து கிடக்கும் குப்பை 
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் அலங்காநல்லூர் செல்லும் சாலையின் ஓரத்தில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இங்கு தினமும் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                              
மரியம், ஒத்தக்கடை.

மேலும் செய்திகள்