பெங்களூருவில் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியது; மோடி இன்று பங்கேற்பு
பெங்களூருவில் 3 நாட்கள் தொழில்நுட்ப மாநாடு நேற்று தொடங்கியது. இன்று(வியாழக்கிழமை) பிரதமர் மோடி காணொலி மூலம் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அவர் இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சி குறித்து உரையாற்றுகிறார்.
பெங்களூரு:பெங்களூருவில் 3 நாட்கள் தொழில்நுட்ப மாநாடு நேற்று தொடங்கியது. இன்று(வியாழக்கிழமை) பிரதமர் மோடி காணொலி மூலம் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அவர் இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சி குறித்து உரையாற்றுகிறார்.
டிஜிட்டல் மயமாகிறது
கர்நாடக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் 24-வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு தொடக்க விழா பெங்களூருவில் உள்ள தாஜ் வெஸ்ட் என்ட் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:-
தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்த தொடங்கினால் அதன் மூலம் நாடு பலம் வாய்ந்ததாக மாறும். நமது நாட்டில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அதில் தொழில்நுட்பத்தை சேர்த்து கொண்டால், அது விவசாய மேம்பாட்டிற்கு உதவும். நமது நாடு தற்போது அறிவாற்றல் அடிப்படையில் வளர்ந்து வருகிறது. கொரோனா பரவ தொடங்கிய பிறகு நாடு டிஜிட்டல் மயமாகி வருகிறது.
திறன்மிகு மனிதவளம்
எந்த துறையாக இருந்தாலும் சரி, அரசின் கொள்கைகள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் சரி, தொழில்நுட்பத்தின் பயன் சமுதாயத்தின் கடைக்கோடியில் உள்ளவர்களை சென்றடைவது மிக முக்கியம். தொழில்நுட்பம் மூலம் ஒட்டுமொத்த நடைமுறையையும் மாற்ற வேண்டும் என்பது தான் பிரதமர் மோடியின் விருப்பம்.
நாடு வளர்ச்சி அடைவதில் அரசுகளின் பங்கு முக்கியமானது. ஆனால் நாட்டில் வேலை வாய்ப்புகளை பெருக்குவதில் தனியார் துறையின் பங்களிப்பு முக்கியமானது. அதை தனியார் துறைகள் செய்ய வேண்டும். அதற்கு ஏற்றார்போல் பிரதமர் மோடி, சீர்திருத்தம்-சாதனை-வளர்ச்சி என்ற மூல மந்திரத்தின் அடிப்படையில் அரசின் கொள்கைகளை வகுக்கிறார். உலகின் பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் உள்ளனர். இது நமது திறன்மிகுந்த மனித வளத்தை உறுதி செய்வதாக உள்ளது.
புதிய ஆலோசனைகள்
நமது நாடு குறிப்பாக பெங்களூரு ஆர்வமாக செயலாற்றி வருகிறது. அறிவு சார்ந்த விஷயங்கள் என்று வரும்போது, நமது பண்பாடுகள், கலாசாரத்தின் முக்கிய சாரமான பகிர்ந்து கொள்ளுதல், மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவது ஆகியவற்றை நாம் தொழில்நுட்பம் மூலம் முன்னெடுத்து செல்ல வேண்டும். தொழில்நுட்பம் சமுதாயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்துடன் நாம் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் பலம் வாய்ந்த நாடாக வளர முடியும். விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் புதிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். கொரோனா பிரச்சினையுடன் பருவநிலை மாற்றத்தால் மனித சமூகம், பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஆராய்ச்சிகள் மூலம் புதிய ஆலோசனைகளை செயல்படுத்த வேண்டும். இது அறிவாற்றல் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இது சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.
பசவராஜ் பொம்மை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் திறமையான மனிதவளம் உள்ளது. தொழில் வளர்ச்சிக்கு உகந்த கொள்கைகள் அமலில் உள்ளன. தொழில் முதலீட்டாளர்களை மாநில அரசு திறந்த மனதுடன் வரவேற்க தயாராக உள்ளது. தகவல் தொழில்நுட்பம்-உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, விமானவியல், ஆராய்ச்சி, வளர்ச்சியில் கர்நாடகம் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது.
அத்துடன் திறன்மிகு மனித வளத்தை உருவாக்குவதிலும் கர்நாடகம் முன்னணியில் இருக்கிறது. அதனால் தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு கர்நாடகம் ஒரு சிறந்த தலமாக அமைந்துள்ளது. புதிய கர்நாடகம் மூலம் புதிய பாரதத்தை உருவாக்க முடியும். பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டம் வெற்றி பெற வேண்டும்.
கர்நாடகத்தில் உற்பத்தியை தொடங்கி இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் திட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். தொழில்நுட்பத்துறையில் இருப்பவர்கள் சாதனையையே இலக்காக கொண்டு செயலாற்ற வேண்டும். தொழில்நுட்பம் இறுதியில் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
நடிகர் புனித் ராஜ்குமார்
வெங்கையா நாயுடு தனது பேச்சின் தொடக்கத்தில் நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண், கவர்னர் தாவர்சந்த் கெலாட், தொழில் அதிபர்கள் கிரிஷ் கோபாலகிருஷ்ணா, கிரண் மஜூம்தர் ஷா மற்றும் உயர் அதிகாரி ரமணரெட்டி, மீனா நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று மோடி உரை
3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது.
பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) காணொலி மூலம் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அவர் இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பேசுகிறார்.