உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் மாயமான ஹேக்கர் ஸ்ரீகி
பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஹேக்கர் ஸ்ரீகி மாயமாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஹேக்கர் ஸ்ரீகி மாயமாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மடிக்கணினிகள் பறிமுதல்
கர்நாடகத்தில் தற்போது பிட்காயின் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிட்காயின் விவகாரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த முறைகேட்டில் ஹேக்கர் ஸ்ரீகி என்ற ஸ்ரீகிருஷ்ணாவுடன் பா.ஜனதாவினருக்கு தொடர்பு இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். இந்த முறைகேடு விவகாரத்தை பா.ஜனதா மேலிடமும் தீவிரமாக எடுத்து கொண்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் தகவல்களை கேட்டு பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூரு ஜீவன்பீமாநகரில் உள்ள ஒரு ஓட்டலின் மேலாளரை தாக்கியதாக ஹேக்கர் ஸ்ரீகி மற்றும் தொழில்அதிபரின் மகனான விஷ்ணுபட்டை போலீசார் கைது செய்திருந்தார்கள். அப்போது அவரிடம் இருந்து 4 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தற்போது ஸ்ரீகி ஜாமீனில் வெளியே வந்துவிட்டாா்.
சி.ஐ.டி. போலீசார் ஆய்வு
ஆனால் ஹேக்கர் ஸ்ரீகி பிட்காயின் முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதால், அவர் எந்தெந்த நிறுவனங்களின் இணையதளத்தை முடக்கி பிட்காயின் கையகப்படுத்தி இருந்தார், அவர் முறைகேடு செய்த பிட்காயின்களின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
இதையடுத்து, ஸ்ரீகியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 மடிக்கணினிகளையும் ஆய்வு செய்ய சி.ஐ.டி. போலீசாரிடம், ஜீவன்பீமாநகர் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.சி.ஐ.டி. பிரிவின் நிபுணர்கள் குழுவினர் அந்த மடிக்கணினிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றில் பிட்காயின் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதுவும் உள்ளதா?, வேறு ஏதாவது தகவல்களை சேகரித்து வைத்துள்ளாரா? என்பது குறித்து 4 மடிக்கணினிகளையும் சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
10-ம் வகுப்பில் இருந்தே...
இதற்கிடையில், ஹேக்கர் ஸ்ரீகி அரசுக்கு சொந்தமான இணையதளங்கள், பிற வெளிநாட்டு நிறுவனங்களின் இணையதளங்களை முடக்கி பணம் சம்பாதித்து வந்தது முதலில் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருந்தது. ஆனால் ஸ்ரீகி 10-ம் வகுப்பு படிக்கும் போதே இணையதளங்களை முடக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீகி ஆஸ்திரேலியாவில் தான் படித்திருந்தார்.
அவர், 4-ம் வகுப்பு படிக்கும் போதே கம்ப்யூட்டர் மற்றும் இணையதளம் குறித்து படித்திருந்தார். பின்னர் 10-ம் வகுப்பு படித்த போது நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுவதற்கு பணம் தேவைப்பட்டதால் சில இணையதளங்களை முடக்கி, வெளிநாட்டு நிறுவனங்களின் கணக்கில் இருந்து டாலர்களை எடுத்து மோசடி செய்திருந்தார். இதற்கு முன்பு பிட்காயின் முறைகேட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஸ்ரீகியை கைது செய்து விசாரித்த போது, போலீசாரிடம் இந்த தகவலை தெரிவித்திருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவு
ஸ்ரீகியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதையடுத்து, ஸ்ரீகிக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி, போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டார். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள ஸ்ரீகியின் வீட்டுக்கு போலீசார் சென்றபோது, அவர் அங்கு இல்லை. நட்சத்திர ஓட்டலில் தான் அவர் வசிப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கும் போலீசார் சென்றனர்.
ஆனால் ஓட்டலிலும் ஸ்ரீகி இல்லை. இதனால் ஸ்ரீகி தற்போது எங்கு இருக்கிறார்? அவர் தலைமறைவாகி விட்டாரா? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுளளனா்.
ராகுல்காந்தியின் டுவிட்டரை முடக்கியவர்
பிட்காயின் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஸ்ரீகி, இணையதளம், முகநூல், டுவிட்டர் உள்ளிட்டவற்றை முடக்குவதிலும் (ஹேக்) வல்லவர் ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கை ஸ்ரீகி முடக்கி இருந்தார். இதுதவிர தொழில்அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் டுவிட்டர் கணக்கையும் ஸ்ரீகி முடக்கி இருந்தார். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.