பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் அதிகரிப்பு
பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஓடுகிறது. இந்த சேவை நேரம் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
பெங்களூரு:பெங்களூருவில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஓடுகிறது. இந்த சேவை நேரம் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
இரவு 11 மணிவரை...
பெங்களூருவில் கொரோனா காரணமாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் நேரத்தை மெட்ரோ ரெயில் நிர்வாகம் குறைத்திருந்தது. அதன்படி, பெங்களூருவில் தற்போது காலை 7 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை மெட்ரோ ரெயில்கள் இயக்க வேண்டும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரெயில் சேவை நேரத்தை அதிகரித்து உள்ளது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் ஓடத்தொடங்கும். அதுபோல், இரவில் 11 மணிவரை மெட்ரோ ரெயில் சேவையை நீட்டித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.
3 லட்சத்திற்கு அதிகமான...
பெங்களூரு கெங்கேரியில் இருந்து பையப்பனஹள்ளிக்கும், நாகசந்திராவில் இருந்து அஞ்சனாபுரா வரையும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. இரவு 11 மணிவரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுவதால், பெங்களூரு கெம்பேகவுடா (மெஜஸ்டிக்) மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இரவு 11.30 மணியளவில் மெட்ரோ ரெயில்கள் வருகை தரும். இதன்மூலம் மெஜஸ்டிக்கில் இருந்து பிற பகுதிகளுக்கு 11.30 மணிவரை பயணிகள் செல்ல முடியும்.
வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 6 மணியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் ஓடத்தொடங்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 7 மணியில் இருந்து தான் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் கொரோனா காரணமாக மெட்ரோ ரெயில்களில் தினமும் 3 லட்சத்திற்கும் குறைவான பயணிகளே சென்றுவந்தனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக தினமும் 3 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.