கோவில்களில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை மண்டல, மகர விளக்கு தரிசனத்துக்காக கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
கன்னியாகுமரி,
சபரிமலை மண்டல, மகர விளக்கு தரிசனத்துக்காக கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
மண்டல, மகர விளக்கு தரிசனம்
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் தரிசனம் செய்ய செல்வார்கள்.
குறிப்பாக மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று அய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
மாலை அணிந்தனர்
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் நேற்று முதல் மாலை அணிந்து விரதம் இருந்தனர்.
அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே திரண்டனர். பின்னர், அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரையில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று குருசாமிகளிடம் இருந்து துளசிமணி மாலை அணிந்தனர்.
இதில் மண்டல பூஜை தரிசனத்துக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு தரிசனத்திற்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.
நாகராஜா கோவில்
இதேபோல், நாகர்கோவில் நாகராஜா கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், குமாரகோவில் சுப்பிரமணிசாமி கோவில், மருங்கூர் சுப்பிரமணிசாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், பார்வதிபுரம் அய்யப்பன் கோவில், கடுக்கரை அய்யப்பன் கோவில், நாகர்கோவில் வைத்தியநாதபுரம் அய்யப்பன் கோவில் ஆகிய கோவில்களிலும் அதிகாலையிலேயே அய்யப்ப பக்தர்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று மாலை அணிந்து கொண்டனர்.