தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-17 20:38 GMT
சாலையை சீரமைக்க வேண்டும்
தடிக்காரன்கோணத்தில் இருந்து கீரிப்பாறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை தற்போது பெய்த கனமழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                            -மணிகண்டன், தடிக்காரன்கோணம். 
சேதமடைந்த மின்கம்பம்
குளச்சல் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட உடையார்விளை சந்திப்பில் இருந்து கோணங்காடு, கோட்டவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் 3 மின்கம்பங்கள் சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.இப்பகுதி எப்போதும் வாகன போக்குவரத்து நடைபெறும் பகுதியாகும். எனவே, மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 3 மின்கம்பங்களையும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.டைட்டஸ் ராஜன், உடையார்விளை.
நாய்கள் தொல்லை
அழகியமண்டபத்தில் இருந்து திருவிதாங்கோடு செல்லும் சாலையில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளையும் விரட்டி கடிக்க வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் அச்சத்துடனேயே சாலையில் சென்று வருகின்றனர். எனவே, நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும். 
                      -சுல்தான் அப்துல் காதர், திருவிதாங்கோடு. 
சுகாதார சீர்கேடு
இரணியல் ரயில் நிலையம் அருகில் உள்ள பாலத்தின் மேல் பகுதியில் இரணியல் கோணம் சாலை செல்கிறது. இந்த பாலம் பகுதியில் சாலையோரத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அங்கு தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                          -ராஜா, பார்வதிபுரம்.
விபத்து அபாயம்
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் சந்திப்பு முதல் செட்டிகுளம் செல்லும் சாலை மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஜல்லிகள் நிரப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. ஆனால், தற்போது சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி பெயர்ந்த ஜல்லிகளை அகற்றி சாலையை முறையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                             -ரபீக், நாகர்கோவில்.
வாகன ஓட்டிகள் அவதி
மருங்கூரில் இருந்து அமராவதிவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மருங்கூர் ஆற்றுப்பாலத்தில் இருந்து அமராவதிவிளை சாலையில் ஒரு குறிப்பட்ட தூரம் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                     -கே.எ.நாராயணன், மருங்கூர்.

மேலும் செய்திகள்