இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
சிவகாசி வெடி விபத்தில் 2 மாடி கட்டிடம் தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 பெண் தொழிலாளர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிவகாசி,
சிவகாசி வெடி விபத்தில் 2 மாடி கட்டிடம் தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 பெண் தொழிலாளர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெடி விபத்து
சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காகித குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வேல்முருகன் (வயது 37), மனோஜ்குமார் (27) ஆகியோர் காயத்துடன் உயிர்தப்பினர்.
மேலும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த கார்த்தீஸ்வரி (33), ஹமிதா (55) மாயமாகினர். இந்தநிலையில் 26 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இடிபாடுகளில் புதைந்து கிடந்த 2 பெண்களின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு உறவினர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் இறந்தது வேல்முருகன் மனைவி கார்த்தீஸ்வரி (33) சலீம் மனைவி ஹமீதா (55) என்று உறுதி செய்யப்பட்டது.
நிவாரணம்
வெடி விபத்தில் இறந்த 2 பேரின் குடும்பத்துக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து கட்டிட உரிமையாளர் ராமநாதனின் உறவினர் ஒருவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து 2 குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக உறுதி அளித்தார். அதற்கான செக்கை வழங்கினார். அதற்கு உறவினர்கள் உரிய நிவாரண தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உடனே பணம் ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் செக் தருவதாகவும், தற்போது 2 குடும்பங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் ரொக்கம் தருவதாகவும் உறுதி அளித்தார். இதற்கு அதிகாரிகள் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது அதிகாரிகளுக்கும், இறந்தவர்களின் உறவினர்களுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. பிணத்தை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே காவல் துறையை சேர்ந்த ஒரு அதிகாரி தற்போது வழங்கப்படும் செக்குகளை பெற்றுக்கொள்ள பாதிக்கப்பட்டவர்களை கேட்டுக்கொண்டார். பணம் பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் காவல்துறை உரிய உதவி செய்யும் என்று உறுதி அளித்தார். அதன் பின்னர் 2 குடும்பத்தை சேர்ந்தவர்களும் ரூ.5 லட்சத்துக்கான செக் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். பின்னர் 2 குடும்பங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் ரொக்கமாகவும், தலா ரூ.5 லட்சம் செக்காகவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் மணிராஜை போலீசார் கைது செய்தனர்.