தஞ்சையில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக புகார் உரிமையாளர், மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
தஞ்சையில் ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர், அவருடைய மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:-
தஞ்சையில் ரூ.200 கோடி வரை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர், அவருடைய மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம்
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆம்னி பஸ்களில் பங்குதாரராக சேர்ப்பதாக பல்வேறு நபர்களை முதலீட்டாளர்களாக சேர்த்தது. அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பணம் கட்டி பங்குதாரர்களாக சேர்ந்தனர். அதன்படி அவர்களுக்கு பங்குத்தொகையும் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் இறந்து விட்டதையடுத்து பணம் செலுத்தியவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பிக்கேட்ட போது உரிய பதில் கிடைக்கவில்லை.
ரூ.200 கோடி மோசடி புகார்
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி செய்து இருப்பதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து அவர் புகார் மனுக்களை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவுக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தஞ்சை டி.பி.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவரும், ஏற்றுமதி தொழில் செய்து வருபவருமான தமிமுன் அன்சாரி(வயது 49), தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் தான் முதலீடு செய்த பணம் ரூ.15 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
5 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தனக்கு அந்த டிரான்ஸ்போர்ட் நிறுவனம் பணமும் திருப்பி தரவில்லை. உரிய பதிலும் அளிக்கவில்லை என்று கூறி தமிமுன் அன்சாரி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் மற்றும் போலீசார், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகரை சேர்ந்த டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் கமாலுதீன்(இறந்து விட்டார்), அவருடைய சகோதரர் அய்யம்பேட்டையை சேர்ந்த அப்துல் கனி, கமாலுதீனின் மனைவி ரெகனாபேகம், மேலாளர் நாராயணசாமி உள்பட 5 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.