ஆற்றில் நீந்திச்சென்று இறந்தவரின் உடலை புதைக்கும் அவலம்
சுடுகாடு வசதி இல்லாததால் ஆற்றி்ல் நீந்திச்சென்று இறந்தவரின் உடலை புதைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.;
ஸ்ரீமுஷ்ணம்,
கடலூா் மாவட்டம ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், டி.பவழங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கீரமங்கலம் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்காக சுடுகாடு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. இதனால் இங்கு யாரேனும் இறந்தால், அவர்களின் உடலை அங்குள்ள வெள்ளாற்றின் மறுகரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக தற்போது வெள்ளாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் கீரமங்கலம் காலனி பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்தார். இதையடுத்து அவரின் உடலை அடக்க செய்ய ஆற்றின் மறுகரைக்கு எடுத்து செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.
உயிரை கையில் பிடித்தப்படி...
ஆற்றில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடினாலும் வேறு வழியின்றி அதில் இறங்கி ஆபத்தான முறையில் இறந்தவரின் உடலை உறவினர்கள் மறுகரைக்கு எடுத்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு சுடுகாடு வசதி கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர் வரும்போது எல்லாம் எங்கள் பகுதியில் யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய பாடையில் கட்டி ஆற்றின் வழியாக நீந்திச் செல்லும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு செல்லும் போது, நாங்கள் எங்கள் உயிரை கையில் பிடித்தப்படி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாங்கள் எங்கள் உயிரை பார்ப்பதா?, அல்லது இறந்தவரின் உடலை பாதுகாப்பாக கொண்டு சென்று அடக்கம் செய்வதை பார்ப்பதா? என்பதே எங்களுக்கு தெரியவில்லை. எனவே இந்த அவல நிலையை போக்க சுடுகாடு வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.