தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கூடலூர் நகராட்சியில் தினக்கூலி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தேனி:
கூடலூர் நகராட்சியில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 40 பேர் ஒப்பந்ததாரர் மூலம் தினக்கூலி தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களிடம் மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எப். தொகையை பி.எப். அலுவலகத்தில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சேகருடன், பணியாளர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பி.எப். தொகை கணக்கில் வரவாகவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் பி.எப். தொகையை செலுத்தக்கோரி நேற்று தினக்கூலி தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க தலைவர் ஜெயன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயபாண்டி, கூடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது தூய்மை பணியாளர்களிடம் பிடித்தம் செய்த பி.எப். தொகையை ஒப்பந்ததாரர் செலுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் ஆணையாளர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டத்தில் இருந்த ஆணையாளர் சேகர் அங்கு விரைந்து வந்து தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வருகிற 25-ந்தேதிக்குள் பிடித்தம் செய்த பி.எப் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.