திருமணமான 2வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வேலூரில் திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-11-17 18:15 GMT
வேலூர்

வேலூரில் திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 நர்சிங் கல்லூரி மாணவி

வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு புவனேஸ்வரி (வயது 21) மற்றும் 2 மகன்கள். புவனேஸ்வரி காட்பாடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். 
இந்த நிலையில் அவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மணிகண்டன் (28) என்பவருக்கும் கடந்த 15-ந்தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

புதுமண தம்பதிகள் மறுவீடு மற்றும் விருந்து உபசரிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக மணமகள் வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது புவனேஸ்வரி கணவர் மணிகண்டன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரிடமும் சகஜகமாக பேசி சந்தோஷமாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி உள்பட அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் புவனேஸ்வரியின் பாட்டி பாப்பாம்மாள் கழிவறைக்கு செல்ல முயன்றார். அப்போது, கழிவறையின் கதவை அவரால் திறக்க முடியவில்லை. 
அதையடுத்து அவர் தூங்கிக்கொண்டிருந்த பேரன் சிவாவை எழுப்பி கழிவறை கதவை திறக்க சொன்னார். சிவா கதவை திறக்க முயன்றார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து இருவரும் கதவை தட்டினார்கள். ஆனால் உள்ளே இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.

அதைத்தொடர்ந்து சிவா வீட்டின் வெளியே சென்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். ஜன்னலில் சேலையால் தூக்குப்போட்டு புவனேஸ்வரி தொங்கி கொண்டிருந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவா அலறியடித்தபடி குடும்பத்தினர் அனைவரையும் எழுப்பி இதுகுறித்து கூறினார். 

அதையடுத்து அவர்கள் புவனேஸ்வரியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதைக்கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர்.

திருமணத்தில் விருப்பம் இல்லை

தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். 
மேலும் புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், புவனேஷ்வரிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. அவர் தொடர்ந்து படிக்க விரும்பி உள்ளார். ஆனால் அவரது பெற்றோர் நல்ல வரன் வந்துள்ளது. எனவே மணிகண்டனை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்னர் மணிகண்டன் செல்போனில் 3 முறை புவனேஸ்வரியிடம் பேசி உள்ளார். ஆனால் புவனேஸ்வரி ஒருமுறை கூட மணிகண்டனுக்கு போன் செய்து பேசியது இல்லை என்று கூறப்படுகிறது. விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்