மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திடீர் சாலை மறியல்
திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திடீர் சாலை மறியல் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திடீர் சாலை மறியல் நடந்தது.
ஏரி நீர் ஊருக்குள் புகுந்தது
திருப்பத்தூர் டவுன் ஆரிப்நகர் பகுதியில் 3 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஆரிப்நகர் எதிரே உள்ள பெரிய ஏரி நிரம்பி அருகில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருப்பத்தூர் நகராட்சியில் பலமுறை கால்வாய்களை தூர்வார கோரியும், மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
பாதிக்கப்பட்ட பலர் மசூதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், எனக் கூறி திருப்பத்தூர்-வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் நகர போலீஸ் நிலையம் எதிரில் மாநில செயற்குழு உறுப்பினர் சானவுல்லா தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
முற்றுகையிட்டு கோஷம்
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் நகராட்சியை கண்டித்தும், மாவட்ட கலெக்டரை காணவில்லை என்றும் கோஷம் எழுப்பினர். பின்னர் திருப்பத்தூர் டவுன் போலீசார் நேரில் வந்து சமரசம் செய்தும் யாரும் கேட்கவில்லை.
மாவட்ட கலெக்டர் உடனடியாக நேரில் வந்து அப்பகுதிைய ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரியும் தொடர்ந்து கோஷம் எழுப்பி அங்கிருந்து செல்ல மறுத்தனர்.
உடனடியாக நகராட்சி ஆணையாளர் எகராஜ் பேச்சு வார்த்தை நடத்த முற்பட்டபோது, அவரிடம் பேச மறுத்து மாவட்ட கலெக்டர் அல்லது கலெக்டர் அலுவலக அதிகாரிகள் வரவேண்டும் என்றும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்ததும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் நேரில் வந்து உடனடியாக ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் பகுதிகளையும், கால்வாய்களையும் தூர்வார உத்தரவிட்டதன் பேரில் சாலை மறியிலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.