தீபத்திருவிழாவில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா
தீபத்திருவிழாவின் 8-ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை
தீபத்திருவிழாவின் 8-ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது.
8-ம் நாள் விழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு கோவிலின் 5-ம் பிரகாரத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் உள்பட பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும் போது சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் கோவில் வளாகத்திலேயே பஞ்சமூர்த்திகள் சிறப்பு ரதங்களில் வலம் வந்தனர். நேற்று கோவிலில் 8-ம் நாள் விழா நடைபெற்றது.
காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் 5-ம் பிரகாரத்தில் வந்தனர். வழக்கமாக தேரோட்டம் முடிவடைந்த மறுநாள் சந்திரசேகரர், அருணாசலேஸ்வரர் தேருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்படி, நேற்று காலையில் அருணாசலேஸ்வரர் வலம் வந்த பெரிய ரதத்தின் முன்பு சந்திரசேகரர் எழுந்தருளி நன்றி தெரிவித்தார். அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடந்தது.
சந்திரசேகரர் உற்சவ உலா
தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் சாமிக்கு தீபாராதனை நடந்தது.
இதையடுத்து மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. மாலையில் பிச்சாண்டவர் உற்சவ உலா நடந்தது.
இதையடுத்து இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலாவும் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மாலை 6 மணி அளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்காக பயன்படுத்தப்படும் காடா துணிகளுக்கு கோவிலில் பூஜை நடைபெற்றது. மகா தீபத்திருவிழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 3 நாட்கள் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது.
வருகிற 23-ந்தேதி சண்டிகேஸ்வரர் உலாவுடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.