பழனி, கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழை
பழனியில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.;
பழனி:
பழனியில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
சாலைகளில் தேங்கிய தண்ணீர்
பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. மாலை 5.30 மணி அளவில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் மழை நீடித்தது.
கனமழை எதிரொலியாக பழனியில் திண்டுக்கல் சாலை, பஸ்நிலைய ரவுண்டானா ஆகிய இடங்களில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றது. அந்த தண்ணீரில், வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. பின்னர் இரவு முழுவதும் மழை விட்டுவிட்டு பெய்தது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கொடைக்கானல் பகுதியில் நேற்று மதியம் 1 மணி முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக கடும் குளிர் நிலவியது. மழை, குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
மழையில் நனைந்தபடியே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் மாலையில் வீடு திரும்பினர். சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது. அவர்களும் அறைகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.
தொடர்மழை காரணமாக கொடைக்கானல் நகரையொட்டி உள்ள பியர்சோலா அருவி உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணை நிரம்பிய நிலையில், புதிய அணை நிரம்பும் நிலையில் உள்ளது.
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறி, ஏரிச்சாலையை சுற்றிலும் தேங்கியதால் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால், பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மரங்கள் விழுந்தாலோ அல்லது மண்சரிவு ஏற்பட்டாலோ அது குறித்து உடனடியாக தொடர்ந்து தகவல் தெரிவிக்கலாம் என நெடுஞ்சாலைத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரண்மனை புதூர் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். தண்ணீர் வடியாததால் விடிய, விடிய விழித்திருக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.