அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
கார்த்திகை மாத பிறப்பையொட்டி, அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
முருகபவனம்:
கார்த்திகை மாத பிறப்பையொட்டி, அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
அய்யப்பன் கோவில்
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மலையடிவாரம் அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தின் முதல் தேதியான நேற்று கொடியேற்றம் நடந்தது.
இதையொட்டி அதிகாலை 4 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு சுவாமி அய்யப்பனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. காலை 5.30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதில் திண்டுக்கல் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் கோவில் குருசாமிகள், அய்யப்ப பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அதைத்தொடர்ந்து இனி வரும் 56 நாட்களுக்கு தினமும் இரவு 9 மணியளவில் படிபூஜை, பஜனை மற்றும் அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலாளர் சந்தானம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
விரதம் தொடங்கினர்
இதேபோல் திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவிலில் கார்த்திகை மாதத்தின் முதல் தேதியையொட்டி காலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு சுவாமி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
மேலும் திண்டுக்கல் நாகல்நகர் ஸ்ரீ அய்யப்பன் மணிமண்டபம் உள்பட திண்டுக்கல்லில் உள்ள முக்கிய கோவில்களில் சுவாமி அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
பழனி மலைக்கோவில் மற்றும் திருஆவினன்குடி கோவில், பட்டத்து விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டியில் உள்ள அய்யப்பன் கோவிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது. அப்போது சுவாமி அய்யப்பனுக்கு 16 வகையான அபிஷேகம், 18 படிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து குருசாமிகள் ஜெயராமன், ஞானசேகரன் தலைமையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இதேபோல் சித்தரேவு வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னதியில் குருசாமி அய்யாத்துரை தலைமையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டனர். மேலும் அய்யம்பாளையம் அருள்முருகன் கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னதி மற்றும் பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.