வேலூரில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் ராட்சத பாறைகள்
வேலூரில் உயிர்பலி வாங்கும் வகையில் ஏராளமான ராட்சத பாறைகள் அமைந்துள்ளது. விபரீதம் ஏற்படும் முன்பு அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர்
வேலூரில் உயிர்பலி வாங்கும் வகையில் ஏராளமான ராட்சத பாறைகள் அமைந்துள்ளது. விபரீதம் ஏற்படும் முன்பு அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாய்-மகள் பலி
வேலூர் நகரில் மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரின் கீழ் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, ஓல்டுடவுன், சலவன்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலைஅடிவார பகுதியில் மலையை ஒட்டியவாறு ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் பல ஆண்டுகளான வசித்து வருகின்றனர்.
இந்த மலைப்பகுதியில் கனமழை பெய்யும் போது சில நேரங்களில் பாறைகள் உருண்டு கீழே விழும். கடந்த 14-ந் தேதி காகிதப்பட்டறை பகுதியில் பாறை ஒன்று சரிந்து அங்கிருந்த வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புளியமரத்தில் மோதிய ராட்சதபாறை
சத்துவாச்சாரி பகுதியில் இருந்து சலவன்பேட்டை பகுதி வரை நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஆபத்தான நிலையில் மலையடிவாரத்தில் வசித்து வருகின்றனர். ஏராளமான ராட்சத பாறைகள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு நொடியும் அந்த குடும்பத்தினர் அச்சத்துடனே உள்ளனர். அதுவும் மழைக்காலங்களில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கும் நிலை உள்ளது.
வேலூரில் சமீபத்தில் பெய்த மழையில் சைதாப்பேட்டை ஆரோக்கிய மாதா கோவில் பின்புறம் உள்ள புல்போடி எனும் பகுதியில் ராட்சத பாறை ஒன்று சரிந்து புளியமரத்தின் வேர்ப்பகுதியில் மோதி நிற்கிறது. அந்த மரம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலை உள்ளது. அவ்வாறு விழுந்தால் பாறையும் கீழே விழும். விபரீதம் ஏற்படும் முன்பு அந்த பாறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் அந்த பாறையின் அருகே மேலும் பல ராட்சத பாறைகள் உயிர்பலி வாங்க காத்திருப்பது போல் அமைந்துள்ளது. அவற்றையும் குடியிருப்புகளுக்கு பாதிப்பின்றி அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மண் அரிப்பு
இதேபோல மேற்கண்ட பகுதிகள் முழுவதிலும் பாறைகள் வீடுகள் மீது விழும் நிலையில் உள்ளது. மழைநீர் பாறைகளின் இடுக்குகளின் வழியே செல்வதால் ஏராளமான பாறைகளின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சரிந்து நிற்கிறது. அந்த பாறைகளை அகற்றி உயிர்பலியை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.