அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு முதலிடம்

உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்பட்டியலில் தமிழகத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.;

Update: 2021-11-17 17:51 GMT
காரைக்குடி, 
உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்பட்டியலில் தமிழகத்தில் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
தரவரிசை
குவேக்கரலி சைமண்ட்ஸ் தர நிர்ணய நிறுவனத்தால் வெளி யிடப்பட்ட ஆசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் தரவரிசைப் பட்டியல் 2022-ன் படி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 220-வது இடத்தைப் பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 650-க்கும் மேற்பட்ட ஆசிய அளவிலான நிறுவனங்கள் தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் தரவரிசையில் 220-வது இடத்தை பெற்றுள்ளது. 
இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட உயர்கல்வி நிறுவனங் களில் 23-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத் தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கியூ.எஸ். நிறுவனத்தால் இந்த தரவரிசைக்காக கற்பித்தல் மற்றும் வேலைவாய்ப்பில் பல்கலைக்கழகத்தின் பொது மதிப்பு, ஆசிரியர் மாணவர் விகிதம், சர்வதேச ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் மேற்கோள்களின் எண்ணிக்கை, சர்வதேச ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிமாற்றம் ஆகிய பகுதிகளின் கீழ் உயர்கல்வி நிறுவனங்களின் செயல் திறனை மதிப்பீடு செய்து தர வரிசைப் படுத்தப்பட்டு உள்ளது.
பகுப்பாய்வு
 தரவரிசைப் பட்டியலில் கலந்துகொள்வதற்காக அழகப்பா பல்கலைக்கழக தரவரிசை பிரிவு இயக்குனர் பேராசிரியர் ஜெயகாந்தன் பல்கலைக்கழகத்தின் 2021-ம் ஆண்டுக்கான தரவுகளை சேகரித்து சரியாக பகுப்பாய்வு செய்து சமர்ப்பித்திருந்தார். அவற்றில் தேசிய தர நிர்ணய குழுவால் வழங்கப்பட்ட ஏ ப்ளஸ் அங்கீகாரம், மத்திய கல்வி அமைச்சகம் வழங்கும் தர வரிசையில் 33-வது இடம், டைம்ஸ் ஹையர் எஜூகேஷனின் உலக தரவரிசையில் 501 - 600 -வது பிரிவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த உயரிய தரவரிசையில் அழகப்பா பல்கலைக்கழகத்தை இடம் பெறச்செய்த பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை துணைவேந்தர் பொறுப்பு தலைவரும் தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருமான டாக்டர் கார்த்திகேயன், உறுப்பினர்கள் டாக்டர் சுவாமி நாதன், பேராசிரியர் கருப்புசாமி, பதிவாளர் சேகர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்