சாலையை சீரமைக்க வேண்டும்

சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2021-11-17 17:20 GMT
மன்னார்குடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுக்கான வட்டார வள மையம் வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு மாணவிகள் விடுதி ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இந்த சாலையை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மழைக்காலங்களில் குப்பைகளில் தண்ணீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் முகம் சுழித்தவாறு செல்கின்றனர். மேலும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாணவிகள், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நாகை மாவட்டம் நாகூர் சில்லடி பகுதியில் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரைக்கு ஏராளமான  சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருகின்றனர். மேலும் அவர்கள் தாங்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலீத்தீன் பைகள் போன்ற குப்பைகளை ஆங்காங்கே போட்டு செல்கின்றனர். இதனால் கடற்கரை பகுதி முழுவதும் குப்பைகளாக காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சில்லடி கடற்கரை பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடடிக்கை எடுக்க வேண்டும்.

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு ஊராட்சியில் அவயம்பல் புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 1-வது வார்டுக்கும், 2-வது வார்டுக்கும் இடையே காவிரி ஆறு ஓடுகிறது. இந்த இரண்டு வார்டுகளையும் இணைக்கும் வகையில் பாலம் வசதியில்லை. இந்த நிலையில் 2-வது வார்டுக்கு செல்ல வசதியில்லாததால், அங்கு சாலை வசதி, குடிநீர் வசதி, பொதுகழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் 2-வது வார்டில் இருந்து சித்தர்காடு  ஊராட்சிக்கு செல்ல மாப்படுகை, சாமந்தகுளம் வழியாக பலகிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். இதனால் 2-ம் வார்டு மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதி ஏற்படுத்தி தருவதோடு, 2-வார்டில் இருந்து சித்தர்காடு ஊராட்சிக்கு செல்ல பாலம் கட்டித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்