சேறும் சகதியுமான சாலை
கோவை கணபதி எப்.சி.ஐ.ரோடு பல ஆண்டுகளாக சாலை பராமரிப்பு இல்லாததால் பெரிய குண்டும் குழியும் தோன்றி தண்ணீர் நிரம்பி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் பல இடங்களில் குளம்போன்று தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அடிக்கடி விபத்து நடந்து வரும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சந்திரன், கோவை.
வீணாகும் குடிநீர்
கூடலூர் ஹெல்த் கேம்ப் பகுதியில் இருந்து அரசு பள்ளிக்கூட மாணவர்கள் விடுதி வழியாக மைசூரு- ஊட்டி தேசிய நெடுஞ் சாலைக்கு சிமெண்ட் சாலை செல்கிறது. இதன் கரையோரம் பொருத்தப்பட்டுள்ள நகராட்சி குடிநீர் குழாய்கள் பல இடங் களில் பழுதடைந்து குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த குழாய்கள் சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
அசோக், கூடலூர்.
தெருவிளக்கு ஒளிருமா?
கோவை கணபதி பாலமுருகன் நகர் 2-வது வீதியில் உள்ள விநா யகர் கோவில் அருகே தெருவிளக்கு உள்ளது. இது பழுதடைந்த தால் பல நாட்களாக ஒளிரவில்லை. இதன் காரணமாக அந்தப் பகுதியில் இருள்சூழ்ந்து இருப்பதால் இரவில் அந்த வழியாக செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் பழுதான விளக்கை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.
வேல், பாலமுருகன் நகர்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
மின்கம்பம் சரிசெய்யப்பட்டது
கிணத்துக்கடவில் இருந்து பகவதிபாளையம் செல்லும் சாலயைில் கிருஷ்ணசாமி லே-அவுட் பகுதியில் கடந்த 4 மாதங்களாக மின் கம்பம் சரிந்து கிடந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரிசெய்து உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத் தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
மூர்த்தி, கிணத்துக்கடவு.
ஆதார் மையத்தில் கூடுதல் வசதி
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ஆதார் மையம் உள்ளது. இங்கு தினமும் 30 பேருக்கு மட்டுமே ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு தினமும் 60-க்கும் மேற்பட்டவர்கள் வருவதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். எனவே இங்கு கூடுதலாக பொதுமக்களுக்கு புகைப்படம் எடுக்க வசதி செய்ய வேண்டும்.
முருகேசன், கவுண்டம்பாளையம்.
போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி தேர்நிலை திடலில் இருந்து பல்லடம் செல்லும் ரோட்டில் மாலை நேரங்களில் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் நபர்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகேஷ், மகாலிங்கபுரம்.
விபத்தை ஏற்படுத்தும் சாலை
பொள்ளாச்சி சத்திரம் வீதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளதால் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த நிலையில் அந்த வீதியில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே விபத்தை ஏற்படுத்தும் இந்த சாலையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.
சக்தி, பொள்ளாச்சி.
பழுதான மின்விளக்குகள்
கோவை வடக்கு மணடலம் 44-வது வார்டு பகுதியில் 6 மின்விளக்குகள் ஒளிருவது இல்லை. அத்துடன் இந்த மின்விளக்குகளின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து இருப்பதால் குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை ஒளிர வைக்க வேண்டும்.
ராமசாமி, கோவை.
24 மணி நேரமும் செயல்படுமா?
கோவை கவுண்டம்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையம் காலை முதல் மாலை வரை மட்டுமே செயல்படுகிறது. ஆனால் இரவு நேரத்தில் மூடப்பட்டு விடுவதால் இரவில் யாருக்காவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் சிகிச்சை பெற சிரமமாக இருக்கிறது. எனவே இந்த சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் இயக்க வழிவகை செய்ய வேண்டும்.
முருகன், செந்தமிழ்நகர்.
பஸ் இயக்க வேண்டும்
கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து சோமனூர் முதல் சூலூர் வரை சென்று வரும் 30 எம் என்ற அரசு டவுன் பஸ் செங்கத்துறை வழியாக தினமும் 4 முறை இயக்கப்பட்டது. அது தற்போது ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே முன்பு இருந்ததுபோன்று 4 முறை இந்த பஸ்சை இயக்க வேண்டும்.
விஜயபிரபு, செங்கத்துறை.
குண்டும் குழியமான ரோடு
கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் ரோடு பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருக்கிறது. தற்போது மழை பெய்வதால் அதில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் குழிகள் இருப்பது தெரிவது இல்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
மணிகண்டன், விநாயகபுரம்.
பஸ்கள் நின்று செல்லுமா?
பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டி காந்திபுரம் பஸ் நிறுத்தத்தில் சரிவர பஸ்கள் நிறுத்துவது இல்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த பஸ்நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஷ், சூளேஸ்வரன்பட்டி.