மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும், ஞாயிற்றுக்கிழமையும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்தார்.

Update: 2021-11-17 17:16 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும், ஞாயிற்றுக்கிழமையும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்தார்.
முழுவீச்சு
கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத்துறை மூலம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 
இதுவரை ராமநாதபுரத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் உள்பட 8,27,398 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. கொரோனா தடுப்பூசி பணியை தீவிரப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அனைவரும் பயன்பெறும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாமை இதுவரை 8 முறை நடத்தி உள்ளது.
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று நோய் தாக்குதலும், நோயின் தீவிரமும் மிகக்குறை வாகவே உள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி பணிகளின் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது.
நோய் தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் மே மாதம் முதல் ஜுலை மாதம் வரை 8,219 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இது கடந்த 2 மாதங்களில் வெகுவாக குறைந்துள்ளது.இதன் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டாலும் நோயின் தீவிரம் மிகவும் குறைவாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற தேவை ஏற்படவில்லை என்று தெரிய வருகிறது. 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என்ற நிலையையும், கொரோனா உயிரிழப்பே இல்லை என்ற நிலையையும் உருவாக்க மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும். இந்த வாரத்தில் இன்றும் (வியாழக்கிழமை) 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமையும்) மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 
தடுப்பூசி
எனவே மேற்படி மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்