சகோதரர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை
அண்ணன் மனைவி, மகளை தாக்கிய வழக்கில் சகோதரர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குளித்தலை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குளித்தலை
தாக்குதல்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தமிழ்ச்சோலை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி சாந்தி (வயது 40). இவர்களது குடும்பத்தினருக்கும் கலியபெருமாளின் தம்பிகளான மதியழகன், ராஜேந்திரன் ஆகியோருக்கும் இடையே நிலப்பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று (கடந்த 2013-ல்) சாந்தி மற்றும் அவரது மகள் சத்யா (22) ஆகிய இருவரும் வீட்டில் இருந்தபோது அவர்களது வீட்டிற்கு பின்புறம் உள்ள முட்களை மதியழகன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் வெட்டியுள்ளனர்.
கொலை மிரட்டல்
இதுகுறித்து கேட்ட சாந்தி மற்றும் சத்தியாவை அவர்கள் இருவரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இப்பிரச்சினை குறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் மதியழகன், ராஜேந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்திருந்தனர்.
2 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு தொடர்பான விசாரணை குளித்தலை குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ் சாந்தி மற்றும் சத்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மதியழகன் (58), ராஜேந்திரன் (56) ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.