கரூர் கடைவீதிகளில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரம்
கார்த்திகை தீபதிருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் கரூர் கடைவீதிகளில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கரூர்
தீப திருநாளான திருக்கார்த்திகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தன்று அக்னியாய் சிவந்து அறந்தை கூறிய சிவனின் தரிசனம் வேண்டி கார்த்திகை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த திருநாள் அன்று விரதமிருந்து, நெல் பொரி அல்லது அவல் பொரியை நைவேத்தியமாக படைத்து வீடு மற்றும் நாம் இருக்கும் இடங்களில் விளக்கேற்றி வழிபடுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீட்டின்முன்புறம் மற்றும் மாடிபகுதியில் வரிசையாக அகல் விளக்குகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றுவார்கள். மேலும் வீட்டையே கோவிலாக மாற்றும் வகையில் வீடு, வாசல் முழுவதும் விளக்குகளை ஏற்றி கொண்டாடுவார்கள்.
விற்பனை மும்முரம்
மேலும் வணிக நிறுவனங்கள், கோவில்களில் அதிக அளவிலான விளக்குகள் ஏற்றப்படும். கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும். தீபநாளையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பகுதி, ஜவகர்பஜார், திருமாநிலையூர், சுங்ககேட், காந்திகிராமம், தான்தோன்றிமலை, வெங்கமேடு உள்ளிட்ட இடங்களில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் பலவிதமான அகல்விளக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பல்வேறு டிசைன் மற்றும் அளவிற்கு தகுந்தாற்போல் அகல் விளக்குகள் ரூ.1, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50 முதல் ரூ.100 வரையிலும், பெரிய அளவிலான விளக்குகள் ரூ.120 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.