சூர்யா, ஜோதிகாவை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் மனு உருவபொம்மை எரிக்க முயன்றதால் பரபரப்பு
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பா.ம.க.வினர் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.
ராணிப்பேட்டை
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பா.ம.க.வினர் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர்.
பா.ம.க.வினர் மனு
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் எம்.கே.முரளி தலைமையில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது,
சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த அமேசான் வெளியிட்ட திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம் 1995 ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதியான வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் படமெடுத்த நடிகர் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோரை கைதுசெய்து படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தனர்.
அப்போது பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், சமூக நீதிப்பேரவை மாநில துணை செயலாளர் வக்கீல் ஜானகிராமன், வாலாஜா மத்திய ஒன்றிய செயலாளர் சபரி கிரீசன் உள்பட பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சோளிங்கர்
இதேபோல் ஜெய்பீம் படத்தை கண்டித்து ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் சோளிங்கர் தாலுகா அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க.முன்னாள் மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், சமூக சமூக நீதிப் பேரவை துணைச் செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் சென்று சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.
பாணாவரம் போலீஸ் நிலையத்திலும் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க.வினர் மனு அளித்தனர். அப்போது போலீஸ் நிலையம் எதிரில் நடிகர் சூர்யா உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ேபாலீசார் அதனை தடுத்து பா.ம.க.வினரிடமிருந்து உருவபொம்மையை பிடுங்கிச்சென்றனர்.