செத்துக்கிடந்த மான்
உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் செத்துக்கிடந்த மான்களை வனத்துறையினர் அகற்றினர்.;
தளி,
உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் செத்துக்கிடந்த மான்களை வனத்துறையினர் அகற்றினர்.
திருமூர்த்தி அணை
உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு பி.ஏ.பி.பாசனம் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருமூர்த்தி அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகின்றன நீராதாரங்கள் பெரியஅளவில் கை கொடுப்பதில்லை. இதனால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த கால்வாய் விலங்குகளின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.
வறட்சிக் காலங்களில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வசதியாக கால்வாயில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.ஆனாலும் குட்டியானை, கடமான், காட்டெருமை உள்ளிட்டவை தண்ணீர் குடிக்கும்போது தவறி கால்வாயில் விழுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி உணவுக்காக செந்நாய்கள் மானை துரத்தி வரும் போதும் தவறி வாய்க்காலில் விழுந்து விடுகிறது. அவை தண்ணீரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து கால்வாயில் இருந்து மேலே வரமுடியாமல் இறந்து விடுகின்றன.
3 மான்களின் உடல்கள்
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காண்டூர் கால்வாய்க்கு தண்ணீர் குடிப்பதற்காக 2 குட்டிகளுடன் வந்த கடமான் கால்வாயில் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது.அந்த 3 மான்களின் உடல் அழுகிய நிலையில் அணையில் மிதந்தது.. இதனால் கடும் துர்நாற்றம் வீசியதுடன் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மாசுபடும் சூழல் ஏற்பட்டது.
இது குறித்த தகவலின் பேரில் உடுமலை வனச்சரக அலுவலர் தனபாலன் தலைமையில் வனவர் தங்கப்பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் அணைப்பகுதிக்கு சென்றனர். அங்கே நீர் இருப்பு அதிகமாக இருந்ததால் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த மான்களின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து மான்களின் உடலை மருத்துவ பரிசோதனை செய்து அணைக்கு அருகில் புதைத்தனர்.