இருளஞ்சேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் இருளஞ்சேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

Update: 2021-11-17 09:47 GMT
திருவள்ளூர்,

தமிழக அரசின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், அப்பகுதியில் உள்ள பள்ளிகளிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று கடம்பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

அவருடன் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரமேஷ், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், வெங்கடேஷ், திருவள்ளூர் மாவட்ட இருளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் இரா.பிரபு, மாவட்ட தலைவர் சந்திரபாபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த மாநெல்லூர் ஊராட்சி. கனமழை காரணமாக இங்கு உள்ள பழங்குடியினர் காலனியில் வெள்ளம் புகுந்தது. இதனையடுத்து தாசில்தார் மகேஷ் தலைமையில் வருவாய்த்துறையினர் மாற்று ஏற்பாடாக அங்கிருந்த 21 குடும்பங்களை சேர்ந்த 134 பேரை பாதுகாப்பாக அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர்.

மேலும், வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் அப்பகுதியில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கும், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, தங்களுக்கு பட்டாவுடன் கூடிய மாற்று இடத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

அப்போது தாசில்தார் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், ஒன்றியக் குழுத்தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணைத்தலைவர் மாலதி குணசேகர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்