வீட்டில் விளையாடிய போது பரிதாபம்: 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 11 வயது சிறுமி சாவு
வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் கண் மற்றும் தோலை பெற்றோர் தானம் செய்தனர்.
சென்னை,
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் அருண். விவசாயி. இவரது மனைவி கமலாதேவி. சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிப்புரிந்து வரும் இவர், தியாகராயநகரில் தனது 11 வயது மகள் ஹரிணியுடன் வசித்து வந்தார். ஹரிணி அதேப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 31-ந் தேதி ஹரிணி வீட்டின் 3-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி 3-வது மாடியில் இருந்து சிறுமி கீழே விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஹரிணியை, அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிறுமியின் கண் மற்றும் தோல் பெற்றோரின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.