மழையால் சேதமடைந்த பயிர்களை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டனர்
கடலூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களை திறந்த ஜீப்பில் சென்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினர்.
கடலூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இது தவிர வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் கனமழை கொட்டியது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. கால்நடைகளும் செத்தன. மழைக்கு சிலர் பலியாகி உள்ளனர். வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கடலூர் வந்தனர்.
நிவாரண பொருட்கள்
தொடர்ந்து அவர்கள் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை மேற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அருண்மொழிதேவன் தலைமையில் வழங்கினர். பின்னர் மழை வெள்ளத்தால் பயிர் சேதமடைந்த சித்தேரி கிராமத்திற்கு சென்றனர். அப்போது அங்குள்ள விவசாயிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி போன பயிர்களை அவர்களிடம் காண்பித்தனர்.
இதைப்பார்த்த எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளிடம் நெல் பயிரிட்டு எத்தனை நாட்கள் ஆகிறது என்று கேட்டார். அதற்கு அவர்கள் 25 நாட்கள் ஆகிறது என்று பதிலளித்தனர். தொடர்ந்து அவர்கள் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூவாலை கிராமத்திற்கு சென்றனர்.
ஆறுதல்
அங்கு திரண்டு நின்ற மக்கள் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முழுமையாக வேலை கிடைக்க வில்லை. கடன் உதவியும் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர். இதை கேட்ட அவர்கள் தொடர்ந்து திறந்த ஜீப்பில் அங்கு தேங்கி நின்ற தண்ணீரின் வழியாக சென்று பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து பரவனாற்று பாலத்தில் நின்று சேதமடைந்த நெற்பயிர்களையும் பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த விவசாயிகள் மழை வெள்ளத்தால் ஆண்டுதோறும் பரவனாற்றில் வெள்ளம் ஏற்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதி பயிர்கள் அனைத்தும் மூழ்கி சேதமாகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட அவர்கள், பரவனாற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தால் பணிகள் நடக்கவில்லை என்று கூறி, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.
வரவேற்பு
அதன்பிறகு அவர்கள் மணிக்கொல்லை, புதுச்சத்திரம், கொத்தட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக பயிர் சேதங்களை காரில் இருந்து பார்வையிட்டபடி சிதம்பரம் வண்டிகேட் சென்றடைந்தனர். செல்லும் வழியில் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு ஆறுதல் கூறி, அரிசி, போர்வை, வேட்டி, சேலை, சட்டை உள்ளிட்ட நிவாரண பொருட்களை கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான பாண்டியன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர். நிவாரணம் பெற்ற ஒருவர், தன்னுடைய மகளுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் திருமண நிதி உதவி கேட்டு விண்ணப்பித்து இதுவரை கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்தார்.
அ.தி.மு.க. அரசு
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மழை வெள்ளத்தால் அதிக பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரண உதவிகளை வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. இந்த ஆட்சி வந்து 10 மாதமாக இருந்தாலும், 10 நாட்களாக இருந்தாலும் மக்களுக்கான நிவாரண உதவிகளை செய்ய வேண்டியது அரசின் கடமை. அதை அவர்கள் செய்யவில்லை என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் செல்விராமஜெயம், கலைமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், சிவசுப்பிரமணியன், கலைச்செல்வன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.