சேலத்தில் 2 ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றம்; 200 வீடுகளில் தண்ணீர் புகுந்தது-பொதுமக்கள் அவதி
2 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் சேலத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் நேற்று அதிகாலையில் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
சேலம்:
2 ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் சேலத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் நேற்று அதிகாலையில் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
கனமழை
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மேட்டூர், ஓமலூர், கெங்கவல்லி, வீரகனூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வயல்வெளிகளில் மழை நீர் தேங்கியது. ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதே போன்று மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் ஏரிகள் நிரம்பியதால் குமரகிரி ஏரியில் இருந்து உபரிநீர் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் வெளியேறி பஞ்சப்பட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் அசோக் நகர், பச்சப்பட்டி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தொடர்ந்து அங்கு உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
வீடுகளுக்குள் நீர் புகுந்தது
அதே போன்று பெரியபுதூர் ராமன்குட்டை ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் சோனா நகர், அர்ச்சுனன் நகர், முத்துக்கவுண்டர் தோட்டம் ஆகிய பகுதிகள் முழுவதும் சூழ்ந்து நின்றது. குட்டத்தெரு, ராமர் குட்டை, மிட்டாபுதூர், அன்னை தெரசா நகர், பாறை வட்டம், முத்துக்கவுண்டர் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் சாரதா கல்லூரிக்குள்ளும் மழைநீர் தேங்கி நின்றது.
அதிகாலையில் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு எழுந்து கூச்சலிட்டனர். திடீரென்று நீர் புகுந்ததால், அத்தியாவசிய பொருட்களை கூட எடுக்க முடியாமல் பெரும் அவதிப்பட்டனர்.
பொதுமக்கள் அவதி
இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் சாரதா கல்லூரி சுற்றுச்சுவர் பகுதியில் துளையிட்டு தேங்கிய நீரை அந்த பகுதியில் உள்ள கால்வாய்க்குள் திருப்பி விட்டனர்.
அதிகாலையில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் நேற்று மாநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் நேற்று பெய்த மழையால் குரங்குச்சாவடி முல்லைநகர் பகுதியில் பல வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.