பணகுடி பகுதியில் தொடர் மழையால் பப்பாளி மரங்கள் சேதம்
பணகுடி பகுதியில் தொடர் மழையால் பப்பாளி மரங்கள் சேதம் அடைந்துள்ளன.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி, ரோஸ்மியாபுரம், ராஜபுதூர் பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பப்பாளி தோட்டங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் பூ பூத்து காய்க்கும் பருவத்தில் இருந்த பப்பாளி மரங்களில் இலைகள், பூக்கள் அழுகி சேதம் அடைந்தன. இன்னும் ஓரிரு மாதங்களில் பப்பாளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் அவை அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதமடைந்த பப்பாளி மரங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.