களக்காடு பகுதியில் 70 குளங்கள் நிரம்பின
தொடர் மழையால் களக்காடு பகுதியில் 70 குளங்கள் நிரம்பின.
களக்காடு:
களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. முதலில் மழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது. மிதமான அளவில் விட்டு, விட்டு மழை பெய்தது. அதன்பின்னர் கடந்த 2 வாரமாக கனமழை கொட்டி வருகிறது.
இதனால் களக்காட்டில் உள்ள நாங்குநேரியான் கால்வாய், உப்பாறு, பச்சையாறு மற்றும் கால்வாய்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் களக்காடு தாமரைகுளம், சிதம்பரபுரம் பழங்குளம், மேலப்பத்தை பிரவிளாகம் குளம், மாடன்குளம், பாப்பான்குளம், கீழப்பத்தை பெரியகுளம், பத்மநேரி பெரியகுளம், மலையநேரி குளம், பிராங்குளம், சீவலப்பேரி பெரியகுளம் உள்பட 70-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. மேலும் பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன.
குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெற்பயிர் நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.