கால் பாதித்தவர்கள் எளிதில் ஓட்டும் வகையில் புதிய 3 சக்கர வாகனம்- சென்னிமலை விவசாயி கண்டுபிடிப்பு
கால் பாதித்தவர்கள் எளிதில் ஓட்டும் வகையில் புதிய 3 சக்கர வாகனத்தை சென்னிமலை விவசாயி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
சென்னிமலை
கால் பாதித்தவர்கள் எளிதில் ஓட்டும் வகையில் புதிய 3 சக்கர வாகனத்தை சென்னிமலை விவசாயி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
3 சக்கர வாகனம்
சென்னிமலையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53). விவசாயியான இவர் ஏற்கனவே மெட்ரிக் முறையில் கடிகாரம், பெட்ரோல் செலவை குறைக்கும் வகையில் மோட்டார் சைக்கிள் என்ஜினில் புதிய முறை, வார காலண்டர் என புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்துள்ளார்.
இவரது கண்டுபிடிப்புகளுக்காக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் தேசிய விருது பெற்றுள்ளார். மேலும் தமிழக அரசின் அறிவியல் ஆய்வாளர் விருதும் பெற்றுள்ளார்.
தற்போது இவர் கால் பாதித்த மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் ஓட்டி செல்லும் வகையில் 3 சக்கர வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
காப்புரிமை
இதுகுறித்து சுப்பிரமணி கூறியதாவது:-
தற்போது கால் பாதித்தவர்கள் கீழே விழாமல் இருப்பதற்காக இருசக்கர வாகனத்தின் பின் சக்கரத்தின் இருபுறமும் மேலும் 2 சக்கரங்களை பொருத்தி ஓட்டுகின்றனர். மொத்தம் 4 சக்கரங்களை கொண்ட அந்த வாகனங்களை ஓட்டுவது சிரமமானது ஆகும்.
அதனால் கால் பாதித்தவர்கள் எளிதாக ஓட்டும் வகையில் முன் பகுதியில் ஒரு சக்கரம், பின் பகுதியில் 2 சக்கரம் என 3 சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளேன். இதற்காக "டிப்ரன்சியல்" என்ற மெக்கானிசத்தை செயின் மூலம் இயங்கும் வகையில் தயார் செய்துள்ளேன். பஸ், லாரி போன்ற வாகனங்களின் என்ஜினில் இருந்து ராடு மூலம் "டிப்ரன்சியல்" மெக்கானிசம் இயங்கும். ஆனால் இதுவரை எங்கும் இல்லாத வகையில் செயின் மூலம் இயங்கும் வகையில் டிப்ரன்சியலை வடிவமைத்துள்ளேன். இதற்கான காப்புரிமை சான்றும் பெற்றுள்ளேன்.
குறைவான பெட்ரோல்
நான் புதிதாக உருவாக்கியுள்ள 3 சக்கர மோட்டார் சைக்கிளை எளிதாக பழகி இயக்க முடியும். 4 சக்கர மோட்டார் சைக்கிளை விட இதற்கு பெட்ரோல் குறைவாகவே செலவாகும். கால் பாதித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் வயதானவர்களுக்கு என பல வகைகளில் இந்த 3 சக்கர வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கால் பாதித்தவர்களின் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல் அவர்கள் சிறு வியாபாரம் செய்வதற்கும் இந்த வாகனம் முழுமையாக பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த வாகனத்தை உருவாக்கினேன்.
அரசு உதவி
இதற்காக நான் பல வருடங்கள் முயற்சி செய்து முதலில் 3 சக்கர சைக்கிளை உருவாக்கி அதன் மூலம் கிடைத்த அனுபவத்தில் தற்போது 3 சக்கர மோட்டார் சைக்கிளை செய்து முடித்துள்ளேன். இதனை தயாரிப்பு நிலைக்கு கொண்டு வந்து தேவையானவர்கள் வாங்கி பயன்பெற வேண்டுமானால் அரசு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.