காதல் மனைவி பிரிந்து சென்றதால் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை
காதல் மனைவி பிரிந்து சென்றதால் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு
காதல் மனைவி பிரிந்து சென்றதால் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவிலிபாளையம் பகுதியில் செல்லும் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்து கிடந்தவர் சங்ககிரி வடுகபட்டியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 32) என்பதும், அவர் வெப்படையில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் காதல் மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் மோகன்ராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-
மோகன்ராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 வயதுடைய மகள் உள்ளாள். மகாலட்சுமிக்கும், மோகன்ராஜூக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்தனர். இவர்களுடைய விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
காதல் மனைவி
இந்தநிலையில் மோகன்ராஜூக்கும், அவருடன் வேலை பார்த்த சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த சித்ரா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது சித்ரா தனது பெற்றோருடன் செல்வதாக கூறினார். இதனால் காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில், மோகன்ராஜ் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதையடுத்து மோகன்ராஜின் உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்து மோகன்ராஜின் உறவினர்களிடம் உடலை போலீசார் ஒப்படைக்க முயன்றனர். அப்போது மோகன்ராஜ் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகு உடலை பெற்றுக்கொள்வதாக அவர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சுமார் அரைமணிநேர போராட்டத்துக்கு பிறகு உறவினர்கள் மோகன்ராஜின் உடலை பெற்றுக்கொண்டார்கள்.
கடிதம் சிக்கியது
இந்த சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோகன்ராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் குறிப்பிட்ட சிலர் தனது சாவுக்கு காரணமானவர்கள் என்றும், அவர்களது பெயர்களும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.