பள்ளியில் மாணவியை பாம்பு கடித்தது
பள்ளி வகுப்பறைக்குள் சென்ற மாணவியை பாம்பு கடித்தது.
தா.பழூர்:
பாம்பு கடித்தது
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் கனிமொழி(வயது 11). இவர் கோடாலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற கனிமொழி தனது வகுப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பறை கதவின் ஓரத்தில் நல்ல பாம்பு இருந்ததை கவனிக்காத கனிமொழி, வகுப்பறைக்குள் நுழைந்தபோது பாம்பை காலால் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் பாம்பு கனிமொழியின் காலை சுற்றிக் கொண்டது. மேலும் அவரது காலில் பாம்பு கடித்தது. இதனால் அவர் காலை உதறியதில் பாம்பு தூரத்தில் சென்று விழுந்தது. இதை பார்த்த சக மாணவர்கள் பாம்பை அடித்து கொன்றனர்.
தீவிர சிகிச்சை
மேலும் கனிமொழியின் அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட கனிமொழிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.