தஞ்சையில் கடைகளின் மின் இணைப்பை துண்டிக்க வந்ததால் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள், தி.மு.க.வினர் போராட்டம் கடை ஊழியர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தஞ்சை அண்ணா சிலை அருகே கடைகளின் மின் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள், தி.மு.க. வினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடை ஊழியர் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-16 19:14 GMT
தஞ்சாவூர்:-

தஞ்சை அண்ணா சிலை அருகே கடைகளின் மின் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள், தி.மு.க. வினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடை ஊழியர் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைகளை இடிக்க முடிவு

தஞ்சை அண்ணா சிலையில் இருந்து பனகல் கட்டிடம் செல்லக்கூடிய சாலையோரத்தில் செல்போன் கடைகள், துணிக்கடைகள், செல்போன் பழுது பார்க்கும் கடைகள், டீக்கடைகள், செருப்பு கடைகள் என 54 கடைகள் உள்ளன. மழைநீர் வடிகால் மீது இந்த கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த கடைகள் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கடைகளை காலி செய்ய மாநகராட்சி வலியுறுத்தியது. இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கடைகளை காலி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் பொக்லின் எந்திரத்தோடு அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைகள் இடிக்கப்படவில்லை.

வியாபாரிகள், தி.மு.க.வினர் திரண்டனர்

மேலும் வியாபாரிகள் தொடர்ந்து கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, தற்போது கடைகள் இருக்கும் இடத்திற்கு பின்பகுதியில் தங்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடைகளை இடிக்க ஏதுவாக மின் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி மின் வாரியத்துக்கு கடிதமும் எழுதி உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாநகராட்சி சார்பில் கடைகளை இடிக்கப்போவதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜகுமார் தலைமையில் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

500 குடும்பங்கள் வாழ்வாதாரம்

மேலும் வியாபாரிகள் மற்றும் தி.மு.க.வினர் அந்த பகுதியில் சாலையோரம் அமர்ந்திருந்தனர். காலை 10 மணி முதல் மாலைவரை அவர்கள் அங்கேயே திரண்டிருந்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த கடைகளால் யாருக்கும் பாதிப்பு இல்லை. தற்போது கடைகளை இடிக்க வேண்டாம். இதனை நம்பி 500 குடும்பங்கள் உள்ளன. இங்கு கடைகள் இருந்தால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம். ஆனால் மாற்று இடம் கூட வழங்காமல் கடைகளை இடிக்க மாநகராட்சி முயற்சிக்கிறது. எனவே எங்களுக்கு இந்த பகுதிலேயே கடைகள் நடத்த அனுமதிப்பதோடு, எங்களின் வாழ்வாதாரத்தையும் காக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

முற்றுகையிட்டு கோஷம்

இந்த நிலையில் மாலை 4 மணிக்கு இந்த கடைகளுக்கு செல்லும் மின்இணைப்புகளை துண்டிப்பதற்காக மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். அப்போது போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதையடுத்து மின் இணைப்புகளை துண்டிப்பதற்காக மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்களும் அங்கு வந்தனர்.
அப்போது அங்கு திரண்டு இருந்த வியாபாரிகள் மற்றும் தி.மு.க.வினர் மாநகராட்சி அதிகாரிகள், போலீசாரை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு செருப்பு கடையில் வேலை பார்க்கும் தஞ்சை கரந்தையை சேர்ந்த ரமேஷ் (வயது 51) தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

இதையடுத்து அங்கு இருந்த போலீசார் அவரை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் ரமேஷை, போலீஸ் ஜீப்பில் ஏற்றி தஞ்சை நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின் வாரிய அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் தி.மு.க.வினரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்