கலெக்டர் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகை

ஆன்லைன் மூலம் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கல்லூரி மாணவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-11-16 19:12 GMT
திருச்சி, நவ.17-
ஆன்லைன் மூலம் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கல்லூரி மாணவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் கற்பிப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. ஆனாலும், மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டது. சில தேர்வுகளும் ஆன் லைனிலேயே இதுவரை நடத்தப்பட்டன.
இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கலை அறிவியல்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.
நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்தும் இனிநேரடியாகவே நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வகுப்புகளை ஆன் லைனில் நடத்தி விட்டு, தற்போது தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றை எதிர்கொள்ள்வதும் இயலாத காரியம்.
மேலும் நேரடி தேர்வு வைத்தால், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். எனவே தமிழக அரசு கல்லூரி தேர்வுகளை இந்த செமஸ்டர் மட்டும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என கோரிக்கை தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களால் வைக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த மாவட்ட கலெக்டரை வலியுறுத்தும் வகையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கும் எஸ்.எம்.எஸ். மற்றும் நேரடியாக தொடர்பு கொண்டு மாணவர்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, திருச்சியில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைமுற்றுகையிட்டனர். மேலும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாகவே நடத்திட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால், கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்