சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை
பட்டாசு உற்பத்தியின் போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறினால் அந்த ஆலையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி தியாகராஜன் எச்சரித்துள்ளார்.
சிவகாசி,
பட்டாசு உற்பத்தியின் போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறினால் அந்த ஆலையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி தியாகராஜன் எச்சரித்துள்ளார்.
விழிப்புணர்வு கூட்டம்
பட்டாசு உற்பத்தியின் போது சில கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையில் சிவகாசி மற்றம் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் அடுத்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசுகளை உற்பத்தி செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வலியுறுத்தி சிவகாசியில் நேற்று மாலை வெடிப்பொருள் கட்டுப்பாட்டு துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வெடிப் பொருள் கட்டுப்பாட்டுத்துறையின் தலைமை துணை கட்டுப்பாட்டு அதிகாரி தியாகராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:--
பட்டாசு தொழில் கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இந்த பிரச்சினைகள் தீர பட்டாசு உற்பத்தியாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்த வேண்டியது இருக்கும். இந்த நிலையில் ஆலையை மூடும் முடிவுக்கு மட்டும் நீங்கள் செல்ல கூடாது. பட்டாசு தொழிலில் விதிகளை பின்பற்றுவதும், பாதுகாப்பு மிகவும் முக்கியம். கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு என்ன உத்தரவை பிறப்பித்ததோ அதை நான் நிச்சயம் நடை முறைப்படுத்துவேன். விதிகளை மீறினால் நிச்சயம் நடவடிக்கை உண்டு.
சரவெடி கூடாது
சரவெடி தயாரிப்பு குறித்து உங்கள் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டும். சரவெடி நிச்சயமாக தயாரிக்க கூடாது. ஒரு வெடியோடு இன்னொரு வெடியை பின்னினால் கூட அது சரவெடி வெடிதான். இதை யாரும் செய்யக்கூடாது.
சரவெடி தயாரித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பேரியம் நைட்ரேட் பயன் படுத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. அதனால் அதை யாரும் பயன்படுத்த வேண்டாம்.
பேன்சி வெடிகள்
சென்னை உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் பேன்சிரக பட்டாசுகளை தயாரிக்க கூடாது. தகுந்த உரிமையும், உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளவர்கள் மட்டும் தான் பேன்சிரக பட்டாசுகளை தயாரிக்க வேண் டும். போர்மென் இல்லாத ஆலையில் பட்டாசு உற்பத்தி செய்ய கூடாது.
பட்டாசு ஆலைகளை உள்வாடகைக்கு விடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த ஆலையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதித்து பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு விற்பனையாளர்கள், பட்டாசு மூலப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.