பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் தர்ணா
பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்தக்கோரி கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை
தமிழகத்தில் கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பருவத்தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற்றன. தற்போது கொரோனா வெகுவாக குறைந்ததால் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல இயங்கி வருகின்றன. இதனால் பருவத்தேர்வுகள் ஆன்லைனில் நடத்துவதற்கு பதிலாக நேரடியாக நடைபெறும் என கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தநிலையில் நேரடி தேர்வு முறைக்கு கல்லூரி 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் முறையிலேயே தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி புதுக்கோட்டையில் நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் அதிகாரிகள், திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.