விஷமங்கலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி தடுத்து நிறுத்தம். ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 4 பேர் கைது, மறியல்
கந்திலி அருகே குரும்பேரி ஏரியில் இருந்து விஷமங்கலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியை தடுத்து நிறுத்திய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
கந்திலி அருகே குரும்பேரி ஏரியில் இருந்து விஷமங்கலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியை தடுத்து நிறுத்திய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வீணாக செல்லும் உபரிநீர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பேரி ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 82 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக குரும்பேரிஏரி நிரம்பி உபரியாக வெளியேறும் நீர் பாம்பாற்றில் கலந்து சாத்தனூர் அணை வழியாக சென்று வீணாகிறது.
கால்வாய்களை தூர் வாரி உபரி நீரை விஷமங்கலம் பகுதிகளிலுள்ள கமக்கேரி, நாகுட்டை, தசபந்தன ஏரி உள்ளிட்ட 8 ஏரிகள் நிரம்பினால் விஷமங்கலம் பகுதியை சுற்றியுள்ள அங்கநாதவலசை, விசமங்கலம், கோடியூர், சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் சுமார் 300 ஏக்கருக்கு தேவையான பாசன வசதி கிடைக்கும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
பணிகள் தடுத்து நிறுத்தம்
இதுகுறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று முன்தினம் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்களை நேரில் அழைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து கால்வாய்களை தூர் வாரி உபரி நீரை மோட்டார் பயன்படுத்தி பைப்லைன் மூலம் விஷமங்கலம் ஏரிக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்த நேற்று கால்வாய்களை தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கினர்.
ஆனால் குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சப்- கலெக்டர் (பொறுப்பு) பானு, துணை போலீஸ்சூப்பிரண்டு சாந்தலிங்கம், தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் குரும்பேரி ஊர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
4 பேர் கைது; மறியல்
ஆனால் குரும்பேரி பொதுமக்கள் 24 மணி நேரத்தில் ஊர் பொதுமக்கள பேசி முடிவு சொல்கிறோம், அதுவரை வேலையை நிறுத்தி வையுங்கள் என்று கூறினர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் அதிகாரிகளும், பொதுமக்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உபரி நீரை விஷமங்கலம் ஏரிக்கு கொண்டு செல்ல கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பலர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ராமு, ஒன்றிய கவுன்சிலர் சக்ரவர்த்தி, துணை தலைவர் பிரகாஷ், திருநாவுக்கரசு ஆகிய 4 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் கைதுசெய்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்த குரும்பேரி ஊர் பொதுமக்கள், 4 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூரில் இருந்து குரும்பேரி வந்த அரசு பஸ்சை தடுத்துநிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த துணை போலீஸ்சூப்பிரண்டு சந்தலிங்கம் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட 4 பேரையும் அனுப்பி விடுவதாக உறுதி அளித்தார். அதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் குரும்பேரி ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரை பைப்லைன் மூலம் கால்வாயில் அனுப்பும் பணி நடைபெற்று விஷமங்கலம் ஏரிக்கு தண்ணீர் சென்றடைந்தது. பல ஆண்டு கோரிக்கைகள் நிறைவேறியதாக கூறி விஷமங்கலம் பகுதியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள்.