டிரைவர், கண்டக்டர்கள் போராட்டம்
காரியாபட்டி போக்குவரத்து பணிமனையில் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
காரியாபட்டி,
காரியாபட்டி போக்குவரத்து பணிமனையில் இருந்து நரிக்குடி, திருச்சுழி, மதுரை, விருதுநகர், தாமரைக்குளம், திருவளர்நல்லூர், சொக்கனேந்தல், திருச்சி, கோவில்பட்டி உள்பட பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் காரியாபட்டி போக்குவரத்து பணிமனையில் டிரைவர், கண்டக்டர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு ஓய்வறை இல்லாததால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் நேற்று காலை 5 மணி முதல் பஸ்களை இயக்காமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் போக்குவரத்துத்துறை பொது மேலாளர் சிவலிங்கம், காரியாபட்டி தாசில்தார் தனக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் உங்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து காலை 6.30 மணிக்கு மேல் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன.