கன்டெய்னர் லாரி மீது கார் மோதி சென்னை தொழில் அதிபர் உள்பட 2 பேர் பலி

பள்ளிகொண்டா அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சென்ைனயை சேர்ந்த தொழில் அதிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-11-16 18:39 GMT
அணைக்கட்டு
 
பள்ளிகொண்டா அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சென்ைனயை சேர்ந்த தொழில் அதிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

தொழில் அதிபர்

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 61). தொழில் அதிபர். ஜெனரேட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். மகன் கோபிநாத் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

தர்மபுரியில் வசித்து வந்த உறவினர் ஒருவர் இறந்ததையொட்டி காரிய நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற கோவிந்தசாமி காரில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தார். காரை சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் ஓட்டி வந்தார்.

லாரி மீது மோதல்

கார் நேற்று முன்தினம் நள்ளிரவு வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள சின்ன கோவிந்தபாடி பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஓசூரிலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு மோட்டார்சைக்கிள்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கன்டெய்னர் லாரி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. டிரைவர் கவனிக்காததால் அதன் மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் காரின் முன்பக்கம் முற்றிலும் சிதைந்து உருக்குலைந்த நிலையில் காரில் இருந்த தொழில் அதிபர் கோவிந்தசாமி மற்றும் டிரைவர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
அந்த பகுதி கடைகளில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணி

நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அளித்த தகவலை தொடர்ந்து பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏட்டு ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இறந்த 2 பேர் உடல்களையும் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்துக்கு காரணமான நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதி சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரகுநாத் (35) மீது பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் நொறுங்கிய கார் அப்புறப்படுத்தப்பட்டு பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

காரணம் என்ன?

விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ‘‘கன்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்று விட்டார். அப்போது இரவு நேரம் ரோந்து போலீசார் அந்த லாரியை அப்புறப்படுத்தாமல் விட்டதால் பின்னால் வந்த கார், நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தியிருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம்’’ என்றனர்.

மேலும் செய்திகள்