புதுக்கோட்டையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரேநாளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழையினால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

Update: 2021-11-16 18:31 GMT
புதுக்கோட்டை
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடக்கம் முதலே பெய்த மழையினால் பெரும்பாலான குளங்கள் நிரம்பின. ஒரு சில குளங்களுக்கு வரத்து வாரி சரியாக இல்லாமல் போனதால் நிரம்பவில்லை. தொடர் மழையினால் வயல்கள் நீரில் மூழ்கின. இதற்கிடையில் கடந்த ஓரிரு நாட்களாக மழை அதிகமாக பெய்யாமல் வெயில் அடித்தது.
 இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலைக்கு மேல் கன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இந்த மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பொதுமக்கள் அவதி
மேலும், பெரும்பாலான குளங்கள் நிரம்பி உபரிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அந்தவகையில் திருக்கட்டளை, மேட்டுப்பட்டியில் உள்ள குளங்களில் இருந்து வெளியேறிய உபரிநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஒரு சில இடங்களில் லேசாக தண்ணீர் வடிந்திருந்தது. இருப்பினும் பல இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்து ஓடியது. புதுக்கோட்டை அருகே திருமலைராயசமுத்திரம், உப்புப்பட்டி உள்பட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. முட்டளவுக்கு தண்ணீர் இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். புதுக்கோட்டை சின்னப்பா நகர், உய்யகொண்டான் குளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் பாய்ந்தோடியது.
716 குளங்கள் நிரம்பின
குளங்களில் இருந்து வெளியேறிய உபரிநீர் வரத்து வாய்க்கால், கால்வாய் வழியாக முறையாக செல்லாததால் காட்டாறாக பல இடங்களில் பாய்ந்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புக காரணமானது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாற்றுகள் நடப்பட்டிருந்த இடமே தெரியாத அளவிற்கு வயல்கள் நீரில் மூழ்கின. அரிமளம் ஒன்றியம், பெருங்குடி கண்மாய் கலிங்கு சேதமடைந்து தண்ணீர் வயல்களில் புகுந்தது. ஏற்கனவே பெய்த மழையால் வயல்கள் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் மேலும் மழையினால் கூடுதல் சேதமானது. மாவட்டத்தில் நேற்று காலை நேர நிலவரப்படி புதுக்கோட்டை நகராட்சியில் 36 குளங்களும் நிரம்பின. இதேபோல மாவட்டம் முழுவதும் மொத்தம் 716 குளங்கள் முழு கொள்ளவை எட்டின. அதில், பல இடங்களில் உபரிநீர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 1,958 குளங்கள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நிரம்பி உள்ளன. தொடர்ந்து மழை பெய்தால் இவைகளும் நிரம்பிவிடும். 1,408 குளங்கள் 51 சதவீதம் முதல் 75 சதவீதங்களும், 826 குளங்கள் 26 சதவீதம் முதல் 50 சதவீதங்களும், 166 குளங்கள் 25 சதவீதம் வரையும் நிரம்பி உள்ளன.
பொக்லைன் எந்திரம்
புதுக்கோட்டையில் காந்திபூங்கா அருகே உள்ள குளம் நிரம்பி கால்வாய் வழியாக உபரிநீர் வெளியேறி சத்தியமூர்த்தி சாலையில் பாய்ந்தோடியது. நகர போக்குவரத்து போலீஸ் நிலையம் அருகே ஏற்பட்ட அடைப்பை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்தது. இதனை நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்