20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் செட்டேரி அணை. ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

நாட்டறம்பள்ளி அருகே உள்ள செட்டேரி அணை 20 ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க விவசாயிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-11-16 18:12 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே உள்ள செட்டேரி அணை  20 ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க விவசாயிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செட்டேரி அணை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் கடந்த 1975-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் 868 ஏக்கர் பரப்பளவில் செட்டேரி அணை கட்டப்பட்டது. 46 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த அணைக்கு   தமிழக, ஆந்திரா காட்டுப் பகுதிகளில் பெய்யும் மழை நீர் வந்து கொண்டிருந்தது. 

அதன் பிறகு ஆந்திர மாநில அரசு காட்டுப் பகுதிகளில் இருந்து மழைநீர் வரும் பாதைகளில் தடுப்பணைகளை கட்டியது. இதனால் பல்வேறு இடங்களில் இருந்து செட்டேரி அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதுமாக தடைபட்டது. இதன் காரணமாக கடந்த 20 ஆண்டு காலமாக இந்த அணைக்கு தண்ணீர் வருவது முழுவதும் தடைபட்டது.

வறண்டு கிடக்கிறது

தமிழக காட்டுப்பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த மழை தண்ணீரும் தடைபட்டதால் செட்டேரி அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வருவதில்லை. இதனால் அணை வறண்டு கிடக்கிறது. இதனால் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

இதுகுறித்து பல்வேறு முறை புகார்கள் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் விவசாயிகளும் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அணையில் பல்வேறு இடங்களில் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை அகற்றவும், மணல் திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்