சொத்துகளை பறித்துக்ெகாண்டு அனாதையாக விடப்பட்ட மூதாட்டி. ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு
சொத்துகளை பறித்துக்கொண்டு அனாதையாக விடப்பட்ட மூதாட்டி வாணியம்பாடியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றார்.
வாணியம்பாடி
சொத்துகளை பறித்துக்கொண்டு அனாதையாக விடப்பட்ட மூதாட்டி வாணியம்பாடியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றார். அவரை ஆட்டோ டிரைவர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
அனாதையாக விட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி பகுதியை சேர்ந்த ராஜாமணி மனைவி ரஞ்சிதம்மாள் (வயது 85). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் என்று 4 பேர் உள்ளனர்.
வயது முதிர்ந்த அந்த மூதாட்டிக்கு யாரும் சோறு போட முடியாது எனக் கூறிவிட்டனர். பெற்ற பிள்ளைகளே கொடையாஞ்சி கிராமத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாணியம்பாடிக்கு அழைத்துவந்து எல்.ஐ.சி அலுவலகம் முன்பு உள்ள பாலம் பகுதியில் அனாதையாக விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
தற்கொலை முயற்சி
இதனால் மனமுடைந்த ரஞ்சிதம்மாள் அருகாமையில் உள்ள நியூ டவுன் ெரயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்திற்குச் சென்று ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முற்பட்டார்.
அங்கு இருந்த அய்யன் திருவள்ளுவர் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ராஜி மற்றும் சக ஓட்டுனர்கள் ரஞ்சிதம்மாளை மீட்டு ஆட்டோ ஸ்டாண்டில் அமரவைத்து உணவு வாங்கி கொடுத்து ஆறுதல் கூறி பரிவுடன் பேசினர்.
தகவல் அறிந்த டாக்டர் ஏ.பி.ஜே.பசுமை புரட்சி அறக்கட்டளையினர் அங்கு வந்து ரஞ்சிதம்மாளை மீட்டு அவர்களது வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் அவரை அழைத்துச்செல்ல வரவில்லை,
திட்டித்தீர்த்தனர்
வாணியம்பாடி நகர போலீசார் விசாரித்து ரஞ்சிதம்மாளிடம் அவரது உறவினர்களை அழைத்து வந்தனர், அவர்களிடம் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினர். இதனை அடுத்து விருப்பம் இல்லாமல் அந்த மூதாட்டியை அவர்கள் அழைத்து சென்றனர்.
வயதான காலத்தில் பெற்ற தாயை நடுத்தெருவில் விட்டுச் சென்ற மகன்கள் மற்றும் மகளை அந்த பகுதி மக்கள் சரமாரியாக திட்டித் தீர்த்தனர்.
நான்கு பிள்ளைகள் பெற்றவர்களுக்கு நடுத்தெருவில்தான் சோறு என்பார்கள். அவர்கள் பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும் என்பது இதன் பொருள். இந்த பழமொழிக்கு ஏற்ப 4 பிள்ளைகளை பெற்ற பெண்ணுக்கு மகன்களும் மகளும் சோறுபோடாமல் அனாதையாக விட்டு சென்றதும் மனமுடைந்த அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றதும் மனிதநேய ஆர்வலர்களை பதைபதைக்க வைத்துள்ளது.