ஆம்பூர் அருகே பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 14 குழந்தைகளுக்கு மயக்கம்
ஆம்பூர் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 14 குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 14 குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயக்கம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சோமலாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 17 குழந்தைகள் வந்திருந்தனர். அங்கன்வாடி மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் அஞ்சலி, சமையலர் மல்லிகா ஆகியோர் பணியில் இருந்துள்ளனர்.
அங்கன்வாடி மையத்தில் நேற்று வழக்கம்போல குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உணவு ஊட்டி கொண்டிருந்தனர். அப்போது போது ஒரு பெற்றோர் ஊட்டிய உணவில் பல்லி இருந்ததாகவும், சில குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த அனைத்து பெற்றோர்களும் உடனடியாக குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவலறிந்த வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியம் அங்கன்வாடி மையம் மற்றும் மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து, உரிய சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன், தி.மு.க. நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் ஆகியோரும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சர்மிளா கூறியதாவது:-
14 குழந்தைகள்
தற்போதுவரை 14 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த ஒரு பாதிப்புமின்றி நலமாக உள்ளதாகவும், குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். அங்கன்வாடி மையத்திற்கு நேரில் வந்த மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி அங்கன்வாடி பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.