4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கம்பத்தில் கேரளாவுக்கு மினி லாரியில் கடத்திய 4½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உத்தமபாளையம்:
கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உமா தேவி மற்றும் போலீசார் கம்பம்மெட்டு பகுதியில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடையுள்ள 90 மூட்டைகளில் 4½ டன் ரேஷன் அரிசியை கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. லாரியில் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அரிசி மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.