இருள் சூழ்ந்த குடியிருப்புகள்

தேனி நகரில் உள்ள குடியிருப்புகளில் தெரு விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து கிடப்பதால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

Update: 2021-11-16 16:50 GMT
தேனி: 


இருள் சூழ்ந்த குடியிருப்புகள்
தேனி அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. சமீப காலமாக தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால், இரவு நேரங்களில் தெருக்களும், சாலைகளும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

தேனி என்.ஆர்.டி. நகர், கே.ஆர்.ஆர். நகர், காந்திஜிரோடு, பாரஸ்ட்ரோடு, சுப்பன்தெரு திட்டச்சாலை உள்பட நகரின் பல இடங்களில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனால், இப்பகுதிகள் இரவில் இருள் சூழ்ந்துள்ளன. இந்த பகுதிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் அதிக அளவில் நடைபயிற்சி செல்வது வழக்கம். முக்கிய குடியிருப்புகள் இருள் சூழ்ந்து கிடப்பதால் திருடர்கள் அச்சத்தால் பெண்கள் நடைபயிற்சி செய்ய தயங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மக்கள் அச்சம்
என்.ஆர்.டி. நகர், கே.ஆர்.ஆர். நகர், பாரஸ்ட்ரோடு பகுதிகளில் கடந்த காலங்களில் பல திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பல மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. திருடர்கள் நடமாட்டம் குறித்த அச்சம் உள்ள இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பது மக்களிடம் அச்சத்தை அதிகரித்துள்ளது.

இருள் சூழ்ந்து கிடப்பதால் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் அவற்றால் பயனின்றி போகிறது. எனவே, தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்