தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-16 16:22 GMT

கழிவுநீர் சூழ்ந்து பாதிப்பு 


கோவை 32 -வது வார்டு சேரன்மாநகர், ராமாத்தாள் லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை யில் கழிவுநீர் குழாய் உடைந்து, குடியிருப்புகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் நோய் பரவும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே கழிவுநீர் குழாய் உடைப்பை சரி செய்து, தேங்கிய கழிவு நீரை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்.
சியாமளா, சேரன்மாநகர்.

குப்பைகளால் கொசுக்கள் தொல்லை

கோவை தெலுங்குபாளையம் புதூர் 76-வது வார்டு நாராயண சாமி நகர் லோட்டஸ் கார்டன் 3-வது வீதியில் குப்பைகள் சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடப்பதால் அதில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து அதன் தொல்லை அதிகரித்து உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடக்கை எடுத்து அந்த குப்பைகளை அகற்ற வேண்டும்.
ராமன், தெலுங்குபாளையம். 

சுகாதார சீர்கேடு 

பொள்ளாச்சியை அடுத்த பணிக்கம்பட்டியில் பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, கிட்டசூராம்பாளையம்.

சாக்கடை கழிவுகள்

கோவை நியூ சித்தாபுதூர் வெங்கடசாமி ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டது. அந்த கழிவுகள் சாலையோரத்தில் போப்பட்டன. ஆனால் 2 மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த கழிவுகள் அகற்றப்படவில்லை. அதன் அருகே குடிநீர் குழாய் இருப்பதால், துர்நாற்றத்தையும் தாங்கிக்கொண்டு குடிநீர் பிடிக்க வேண்டிய பெண்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அந்த சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும்.
கணேசன், கோவை. 

சர்வீஸ் சாலை வேண்டும் 

பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு வடுகபாளையம் பிரிவில் ரெயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தற்போது பெய்து வரும் மழைக்கு சேறும், சகதியுமாக உள்ளதால் விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே சர்வீஸ் சாலை பணிகளை உடனடியாக தொடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, பொள்ளாச்சி. 

குவிந்து கிடக்கும் குப்பைகள் 

கோவை கணபதி கே.ஆர்.புரம் வரதராஜ் லே-அவுட் பகுதியில் உள்ள பள்ளி அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால், அதில் மழைநீர் தேங்கி அருகில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
ஹரிகரன், கோவை. 

ஆபத்தான குழி

கோவை செல்வபுரம் அரசமரம் பஸ்நிறுத்தம் எதிரே நடைபாதையில் ஆபத்தான குழி உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் அந்த குழிக்குள் விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடப்பதற்கு முன்பு அந்த குழியை சரிசெய்ய வேண்டும். 
ஜெய்பிரகாஷ், செல்வபுரம். 

சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்

கிணத்துக்கடவில் இருந்து பகவதிபாளையம் செல்லும் சாலையில் கிருஷ்ணசாமி லே-அவுட் பகுதியில் கடந்த 4 மாதங்களாக மின் கம்பம் சாய்ந்து கிடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
மூர்த்தி, கிணத்துக்கடவு. 

உடைந்துபோன படிக்கட்டுகள் 

குன்னூர் வண்ணாரபேட்டை ஐதர் கார்டன் பகுதியில் உள்ள நடைபாதையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவை பழுதடைந்து உள்ளதால் ஒளிராமல் இருக்கிறது. அத்துடன் அங்குள்ள படிக்கட்டுகளும் உடைந்து இருப்பதால் இரவில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை ஒளிர செய்வதுடன், படிக்கட்டுகளை சரிசெய்ய வேண்டும்.
யசோதா, குன்னூர். 

துர்நாற்றத்தால் அவதி 

கோவையை அடுத்த கோவைப்புதூர் அறிவொளி நகர், அண்ணா நகர் பகுதியில் குடிசைமாற்று வாரிய கட்டிடங்கள் உள்ளன. இங்கு கழிப்பிடத்தில் இருந்து செப்டிக் டேங்கிற்கு செல்லும் குழாய் உடைந்து உள்ளதால் கழிவுகள் வெளியேறுகிறது. இதனால் அங்கு இருக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.
ஜெயசந்திரன், கோவை. 

தொற்றுநோய் பரவும் அபாயம் 

கோவை கருப்பராயன்பாளையம் திலகர் தெருவில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் அந்த தண்ணீரில் கொசுக்களும் உற்பத்தியாகி வருகிறது. எனவே தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும்.
மணிகண்டன்,கருப்பராயன்பாளையம். 

மின்விளக்குகள் ஒளிருமா?

கோவை காந்திபுரம் மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் உள்ள நஞ்சப்பா சாலையில் மின்விளக்குகள் உள்ளன. அவை பழுதடைந்து உள்ளதால் ஒளிருவது இல்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே பழுதான மின்விளக்குகளை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும். 
ஆனந்த், தெலுங்குபாளையம். 

மேலும் செய்திகள்