சின்னாளப்பட்டி பஸ் நிலையத்தில் கழிப்பறையில் தூக்குப்போட்டு ஜவுளி வியாபாரி தற்கொலை

சின்னாளப்பட்டி பஸ் நிலையத்தில் தூக்குப்போட்டு ஜவுளி வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-11-16 16:20 GMT
சின்னாளப்பட்டி:
சின்னாளப்பட்டி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் பாரதிதாசன் (வயது 67). ஜவுளி வியாபாரி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஈஸ்வரன், சினேகன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் பாரதிதாசன் நடைப்பயிற்சிக்கு சென்றார். அதன்பிறகு வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பிவரவில்லை. இதனால் செல்வி தனது கணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. 
இதற்கிடையே சின்னாளப்பட்டி பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள பொது கழிப்பறையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பதாக சின்னாளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், தூக்கில் தொங்கிய முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
போலீசார் நடத்திய விசாரணையில், தூக்கில் தொங்கியவர் பாரதிதாசன் என்பதும், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் அவரது சட்டை பையில் கடிதம் ஒன்று இருந்தது. 
அதில், திருப்பூரில் வசிக்கும் தனது அக்காள் கணவருக்கு ஜாமீன் போட்டு பணம் வாங்கி கொடுத்துள்ளார். அந்த பணத்தை அக்காள் கணவர் திரும்ப செலுத்தாததால், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்று எழுதி வைத்திருந்தார். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்